வேண்டும்  விழிப்புணர்வு

உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பின் (Union for International Cancer Control, UIIC) அறிவுறுத்தலின்படி பிப்ரவரி 4ஆம் நாள் உலக

உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பின் (Union for International Cancer Control, UIIC) அறிவுறுத்தலின்படி பிப்ரவரி 4ஆம் நாள் உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப் படுகிறது.  

இந்த புற்று நோய் தினம் 1933ஆம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக (WICC) ஏற்படுத்தப்பட்டது. புற்று நோய் பற்றிய முழு தகவல்களையும் தருவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இந்த உலக புற்றுநோய் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர். 3 கோடியே 26 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, 6.8 லட்சம் பேர் இறந்துள்ளார்கள். 3 கோடியே 26 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

"புற்று நோய் பற்றிய மூட நம்பிக்கைகளை முற்றிலும் குழி தோண்டி புதைப்போம்' (Debunk the myths) என்ற உறுதி மொழியை உலக புற்று நோய் பிரகடனமாக இந்த ஆண்டு அறிவித்திருக்கிறார்கள்.

உலக மக்களிடையே - குறிப்பாக இந்திய மக்களிடையே - அறியாமையாலும், போதிய கல்வி அறிவு இல்லாததாலும், புற்று நோய் பற்றிய மூட எண்ணங்களும், தவறான கருத்துக்களும் பரவி உள்ளன. அதனால் புற்று நோய் மரணங்கள் தவிர்க்க இயலாததாகிறது.

தற்போது வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக நல்ல இயற்கை சார்ந்த நார்ச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள், கீரைவகைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தவிர்த்து, அதிக எண்ணெய், வறுத்த பொருள்கள் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த பாஸ்ட் புட் போன்ற செயற்கை உணவு பழக்க வழக்கங்களை இன்றைய சமுதாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.

புகை பிடித்தல், புகையிலை பொருட்களை உபயோகித்தல், குடிப்பழக்கம், உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாதது, அளவுக்கு அதிகமான உடல் எடை கூடுதல், மோசமான சுற்றுச் சூழல்களிடையே வாழுதல் ஆகியன புற்று நோய் வர பெரிதும் காரணமாக அமைகின்றன. பெண்களுக்கு போதிய கழிவறைகள் இல்லாதது, இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளுதல், பல குழந்தைகள் பெற்றுக் கொள்ளுதல் ஆகியவை கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைகின்றன.

தடுப்பூசிகள் போடாமல் இருப்பது, கல்லீரல் புற்றுநோய் வர காரணமாய் அமைகிறது. இவற்றையெல்லாம் மக்கள் உணர்கின்ற வகையிலே விழிப்புணர்வை ஏற்படுத்தினால், புற்று நோய் வராமல் பெருமளவிற்கு தவிர்க்க முடியும்.

புற்று நோய் வந்தால் குணப்படுத்த முடியாது என்றும் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற தவறான கருத்து மக்களிடம் பெருமளவில் உள்ளது. ஆனால் உண்மையில் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் மூன்றில் ஒரு பங்கு புற்று நோய்களை சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

குடும்பத்திலே ஓருவருக்கு புற்று நோய் வந்தால் மற்றவருக்கும் தொற்று நோய் போல புற்று நோய் பரவாது என்பதையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் உள்ள நமது நாட்டில் சுகாதாரத்திற்காக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 35,000 கோடிதான்.

புற்றுநோயை பொறுத்தவரை, புற்று நோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள், ஆரம்ப நிலையிலேயே புற்று நோயை கண்டுபிடிக்க எடுக்கின்ற நடவடிக்கைகள், புற்றுநோய் வந்த பிறகு சிகிச்சை அளிக்க தேவையான புற்று நோய் மையங்கள், புற்று நோய் வந்தவருக்கு மறு வாழ்வு அளித்தல் ஆகியவற்றுக்கு அரசு அதிகமான நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது உடனடி தேவை.

இந்நிலையில் ஓரளவு வசதி கொண்ட புற்று நோய் மையங்கள் 128 மட்டுமே உள்ளன. அதுவும் குறிப்பாக பெரு நகரங்களில் மட்டுமே உள்ளன.

மக்கள் தொகைக்கேற்ப அனைத்து மாவட்டங்களிலும் எல்லா வசதிகளும் கொண்ட புற்று நோய் மையங்களை அரசோ அல்லது தனியாருடன் அரசு இணைந்தோ நிறுவ வேண்டும்.

பத்திரிகைகளும், ஊடகங்களும் மக்களிடையே புற்றுநோய் பற்றிய முழு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

இப்படி அனைவரும் இணைந்து செயல்பட்டால், இந்நோயிலிருந்து மக்களை நிச்சயம் காக்கலாம்.

கட்டுரையாளர்: இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com